Sunday , October 21 2018
Breaking News
Home / இதழ்கள் / ஆடர்லி முறை கைவிடப்படுமா? நீதிபதி கிருபாகரன் தீர்ப்புக்கு காத்திருக்கும் காவலர்கள்!

ஆடர்லி முறை கைவிடப்படுமா? நீதிபதி கிருபாகரன் தீர்ப்புக்கு காத்திருக்கும் காவலர்கள்!

‘இன்னமும் காவல்துறையில் ஆர்டர்லி முறை நீடிக்கிறதா? எந்தெந்த அதிகாரிகளுக்கு எத்தனை ஆர்டர்லிகள் உள்ளனர்? அனைத்து விவரங்களையும் டி.ஜி.பி. சமர்ப்பிக்க வேண்டும்’ என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சாட்டையை சுழற்றி உள்ளார். இது தமிழக காவல்துறை மத்தியில்பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும்அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எத்தனை பேர் இன்னும் ஆர்டர்லி போல வேலை பார்க்கின்றனர் என விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். அனைத்து விவரங்களையும் தொகுத்து டி.ஜி.பி. உயர்நீதிமன்றத்தில் ‘ஆர்டர்லி முறை என்று எதுவும் இல்லை’ எனபதில் மனு தாக்கல் செய்துள்ளார் டி.ஜி.பி. ஆனால் அதில் திருப்தி அடையாத நீதிபதி கிருபாகரன் விரிவான பதிலை மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் ஆர்டர்லி என்ற முறை இல்லை, ஓ.டி. என்கிற பெயரில்தான் காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்றுதான் டி.ஜி.பி. பதில் அளிப்பார். இந்நிலையில் ஆர்டர்லி முறை என்றால் என்ன? இன்னும் தொடருகிறதா என விசாரணையில் இறங்கினோம். 1979-ம் ஆண்டு தமிழக அரசு காவல்துறையில் நிலவும் ஆர்டர்லி முறையை ஒழிக்கும் வகையில் அரசானை ஒன்றை பிறப்பித்தது. சாதாரணமாக நீதிபதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவர்களின் வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு பொதுப்பணித்துறையில் இருந்து ஆட்களை நியமிப்பார்கள். அதுவே காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் காவலர்களை நியமிப்பார்கள் இதற்குத்தான் ஆர்டர்லி என்று பெயர். பணியில் இருக்கும் ஆய்வாளர், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர், ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி., டி.ஜி.பி. என காவல்துறையில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ஆர்டர்லிகள் உள்ளனர். 16 முதல் 2௦ மணி நேரம் உயரதிகாரிகள் வேலையில் இருப்பதால் அவர்களுடைய வீடுகளில் உள்ள மனைவி, குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்கே ஆர்டர்லிகளை வைத்துள்ளனர். சில சமயங்களில் கலவரம், தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்காக உயரதிகாரிகள பல நாட்கள் வீட்டிற்கே செல்ல முடியாமல் பணியில் இருப்பார்கள். அந்த சமயத்தில் வீட்டிற்கு தேவையானவற்றை செய்வதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும் ஆர்டர்லிகள் காவல்துறைக்கு தேவை. ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, காவல் நிலையங்களில் பணிபுரியும் முதல் நிலை காவலர் என இவர்கள்தான் ஆர்டர்லிகளாக அனுப்பப்படுகின்றனர்.

தமிழ்த் திரைப்படங்களில், உயரதிகாரிகளின் மனைவிக்கு காவல் நிலைய
காவலர்கள் காய்கறிகள் வாங்கிக் கொடுப்பது, அவர்களின் வாகனங்களை சுத்தம்
செய்வது, அவர்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சென்று விட்டு வருவது
போன்ற காட்சிகளை காண்பிப்பார்கள். அதுதான் நிஜத்திலும் நடந்தேறும்.
புதிதாக தேர்வாகி வரும் காவலர்கள் அப்படித்தான் வேலை வாங்கப்படுவார்கள்.

இவ்வாறு தங்களை நடத்துவதை விரும்பாத காவலர்கள் மத்தியில் ஆர்டர்லி முறை
குறித்த நீதிமன்றத்தின் கேள்வி பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த
முறை இந்த வாய்ப்பை விட்டுவிடவே கூடாது என காவல்துறையில் பணியாற்றும்
இளம் காவலர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரிகள் வீட்டில் பணியாற்றும்
ஆர்டர்லிகள் பெயர், என்ன வேலை செய்கிறார்கள் என்பது உட்பட அனைத்தையும்
சேகரித்து முகநூல், வாட்ஸ் அப்களில் பரவ விடுகின்றனர்.

அதிகாரிகள் பெயர், அவர் என்ன பதவியில் உள்ளார், அவரிடம் உள்ள
ஆர்டர்லியின் எண்ணிக்கை, பெயருடன் யார் யார் என்ன வேலையில்
இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அந்தந்த மாவட்ட காவல்துறையினர் சொல்ல,
அதைப் பட்டியலாக மொத்தமாக சேகரித்துள்ளனர். டி.ஜி.பி.யின்
சுற்றறிக்கைக்கு அதிகாரிகள் ஒழுங்கான பதில் அனுப்புகிறார்களோ இல்லையோ,
டி.ஜி.பி. நியாயமான பதில் தாக்கல் செய்கிறாரோ இல்லையோ, ஆர்டர்லி குறித்த
பட்டியலைத் தெளிவாக தயாரித்து நீதிபதியிடமே நேரடியாக அளிக்கும் வேலையை
இளம் காவலர்கள் செய்யத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறமிருக்க சில காவலர்கள் ஆர்டர்லியாக இருப்பதையே
விரும்புகின்றனர். நம்மிடம் பேசிய உயரதிகாரியின் ஆர்டர்லி ஒருவர், “நான்
பணியில் சேர்ந்ததில் இருந்து அந்த அதிகாரியின் வீட்டில்தான்
பணியாற்றுகிறேன். எந்த பிரச்னையும் இல்லை, வேளாவேளைக்கு உணவு, உறக்கம்,
நிம்மதி எல்லாம் இருக்கிறது. அதுவே காவல் நிலைய பணிக்கு சென்றால் பல
விதமான மனிதர்களை பார்த்து டென்ஷன் ஆகும், வெயிலில் அலையணும், சரியான
நேரத்திற்கு சாப்பிட முடியாது. இது மாதிரியான சிக்கல்கள் இருப்பதால்தான
நான் ஆர்டர்லியாகவே இருக்க ஆசைபடுகிறேன்” என ஒரே போடாக போட்டார். பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி பணியில் இருந்து
ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் எதற்கு ஆர்டர்லிகள் என்ற கேள்வி எழுகிறது.
வால்டர் தேவாரம் 1997ல் ஓய்வு பெற்றவர், ஆனால் அவர் வீட்டில் இன்னும் 7
காவலர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பணியில் இருந்தபோது உயிரைப்
பணயம் வைத்து நக்சல்களை தமிழகத்தில் இருந்து ஒழித்தவர். அவரது உயிருக்கு
எந்நேரமும் ஆபத்து இருப்பதால் வீட்டில் காவலர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ளனர் என போலீசார் விளக்கம் தருகின்றனர். ஓய்வுபெற்ற
ஷகீல் அக்தர் வீட்டிலும் பத்து பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்
அல்-உம்மா தீவிரவாதிகளை வேட்டையாடியவர் அவருக்கு பாதுகாப்பு தேவை
என்கிறது காவல்துறை. இத்தகையை பரபரப்பை கிளப்பியுள்ள வழக்கின் சூத்திரதாரி வழக்கறிஞர்
புருஷோத்தமனிடம் பேசினோம். “2012-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு ஆய்வாளர்
சார்பில் அப்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே கிருபாகரன்
காவலர்களின் மனக்குமுறல்களை விசாரிக்க, குறைகளை தீர்க்க ஓய்வுபெற்ற
நீதிபதி தலைமையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள்,
மனநல, உளவியல் நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைக்க பரிந்துரைத்தார்.
ஆனால் 6 ஆண்டுகளாகியும் அரசு அதனை அமைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களில் ஜெ. சமாதியில் ஒரு காவலரும், அயனாவரம்
காவல் நிலையத்தில் ஒரு எஸ்.ஐ.யும் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு
பணிச்சுமை காரணம் என கூறப்பட்டது. அதனால் நான் மார்ச் 7-ம் தேதி நீதிபதி
கிருபாகரன் முன்னிலையில் ஆஜராகி இதுகுறித்து சொல்லி அந்த வழக்கை மறு
விசாரணை செய்ய வேண்டுமென கேட்டேன். அடுத்த நாளே (மார்ச் 8) வழக்கை
விசாரித்த நீதிபதி கடுமையான விமர்சனங்களை வைத்தார். ராணுவத்தில் கூட ஆர்டர்லிகள் உள்ளனர், ஆனால் வேலை இன்றி அமர்ந்திருக்கும்
ராணுவ வீரனுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக அம்முறை
பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு பணியாற்றுவதற்கே ஆட்கள் பற்றாக்குறை
இருக்கும்போது, அதிலும் பாதிபேரை ஆர்டர்லிகளாக மாற்றினால் எப்படி
சமாளிப்பது? இதையெல்லாம் சுட்டிக்காட்டி, நீதிமன்றமே கமிட்டியை அமைக்க
கோரினேன். அதற்கு நீதிபதி கமிட்டிக்கான நபர்களையாவது அரசு தெரிவிக்க
வேண்டும், இல்லையென்றால் நானே கமிட்டியை அமைத்து விடுவேன் என
எச்சரித்துள்ளார்.

ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது தப்பில்லை, அதற்கு
துப்பாக்கி ஏந்திய 3 காவலர்களை 3 ஷிப்டுகளாக பயன்படுத்தலாம். அதை
விடுத்து சமையல் வேலை, கடைக்கு செல்லும் வேலை, குழந்தைகளை
கவனித்துக்கொள்ளும் வேலை இதற்கெல்லாம் காவலர்களை நியமிப்பது சரியல்ல.
இவ்வாறு காவலர்கள் சிறப்பு வேலைகள் செய்வதால் அரசுக்கு மாதம் இரண்டரை
கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது” என முடித்துக்கொண்டார்.

நம்மிடம் பேசிய முன்னாள் உயரதிகாரி ஒருவர், “ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஏதாவது பிரச்னை காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டிற்கு வந்து
தாக்குதல் நடத்தினால், காவலர் எதிர்த்து நிற்பார், விரட்டுவார். ஆனால்
பொதுப்பணித்துறை ஊழியர்களை நியமித்தால் அவர்கள் பயந்துதான் ஓடுவார்கள்.
அதுமட்டுமின்றி, எந்த ஒரு ரகசியங்களையும் பொதுப்பணித்துறை ஊழியர்கள்
மத்தியில் பேச முடியாது, அதுவே காவலர் என்றால் நடவடிக்கைக்கு பயந்து
வெளியில் கசியவிடாமல் இருப்பார்” என்றார்.

முன்னாள் டி.ஜி.பி.யும், மைலாப்பூர் எம்.எல்.ஏ.விமான நடராஜிடம்
பேசியபோது, “ஆர்டர்லி முறை தற்போது இல்லை, ஆனால் சிறப்புப் பணி என்ற
பெயரில் உள்ளது. வீட்டில் டெலிபோனை எடுப்பதற்கும், மனைவி மக்களை
பத்திரமாக பார்த்துக்கொள்வதற்குமே ஆடர்லிகள் தேவைப் படுகின்றனர். வீர தீர
செயல்கள் புரிந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு மிரட்டல் இருப்பதால்
ஆர்டலிகளை வைத்துள்ளனர். ஆர்டர்லி முறை கண்டிப்பாக தேவை” என பொங்கினார். பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவலர் கூறுகையில், “நீதிபதி உத்தரவால் பல
திருப்பங்கள் நிகழ உள்ளது. 1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து அரசானை
பிரப்பத்தது போல, அதே ஆண்டுதான் காவல்துறைக்கு என சங்கத்தை
நிறுவிக்கொள்ளலாம் என தமிழக அரசு ஒரு அரசானை பிறப்பித்தது. ஆனால் அதற்கான
உத்தவரை டி.ஜி.பி.தான் வழங்க வேண்டும், சுமார் நாற்பது ஆண்டுகள்
உருண்டோடியும் காவலர் சங்கத்துக்கான துரும்பு கூட கிள்ளிப்போடவில்லை.
அவ்வாறு சங்கம் வந்தால், நீ சொல்ற வேலையை நான் ஏன் செய்யணும் என பேசுவது,
போராட்டம், வேலை நிறுத்தம் செய்வது, சிறு வயது உயரதிகாரி மூத்த காவலரை
பார்த்து திட்டுவது போன்ற போலீஸ் அதிகாரிகளின் சுதந்திரம் பறிபோகும் என்ற
பயம் உயரதிகாரிகளுக்கு இருக்கிறது. கடைசி வரை எங்களை அடிமைகளாகவே
வைத்திருக்க இவர்கள் விரும்புவதால்தான் சங்கம் துவங்க மறுக்கிறார்கள்” என
குற்றம்சாட்டினார்.

யார் யார் வீட்டில் எவ்வளவு ஆர்டர்லிகள்?
டி.ஜி.பி. டிகே.ராஜேந்திரன் வீட்டிலேயே 7 பேர் பணியாற்றுகின்றனர்
ஓய்வுபெற்ற அதிகாரிகளை பொறுத்தவரை, ஷகீல் அக்தர் வீட்டில் மட்டும் 20க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது வால்ட்டர் தேவாரம் – 7 பேர் முன்னாள் டி.ஜி.பி. ராஜகோபாலன் – 3 பேர்
பெரம்பலூர் எஸ்.பி. மிட்டல் – 6 பேர் நாகை எஸ்.பி. சஞ்சய் தேஷ்முக் – 5 பேர்
ஜெ.இரவீந்திரன் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 15ம் அணியில் கமாண்டன்ட்
ஆக இருந்து ஓய்வு பெறறவர் – 5 பேர் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் டி.ஜி.பி. நரேந்திர பால் சிங் – 3 பேர் முன்னாள் டி.ஜி.பி. முகர்ஜி – 3 பேர் இது தவிர தற்போது பணியில் இருக்கும் பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் குவிகிறது.
ஆனால் இவை அனைத்தும் எந்தளவுக்கு உண்மைத்தன்மை கொண்டது என்பது சந்தேகமே!

About admin

Check Also

பள்ளியில் படிக்கும் போதே பல்கலைக்கழக சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பயிற்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *