Friday , December 14 2018
Breaking News
Home / சினிமா / அன்பிற்கு உறவுப் பாலமாக நிற்கும் காற்றின் மொழி !!

அன்பிற்கு உறவுப் பாலமாக நிற்கும் காற்றின் மொழி !!

அன்பிற்கு உறவுப் பாலமாக நின்று, தனிமைக்கு ஆறுதல் சென்னால் அது காற்றின் மொழி என்கிற விதத்தில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராதா மோகன்.

சந்தோஷமான குடும்பம், மகன் மிதுன், கணவர் விதார்த் என்று வாழ்ந்து வரும் ஜோதிகா, குடும்பத் தலைவியாக வீட்டின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 3 முறை தோற்று, தந்தை மற்றும் தனது இரு சகோதரிகளால் ஏளனப்படுத்தப்படும் ஜோதிகா, கணவர் மற்றும் மகனின் அன்புகளால் தன்னை தானே சமாதானப்படுத்திக்கொள்கிறார். கணவர் விதார்த் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், பழுதுபோன டிவி பொட்டியை வைத்துக்கொண்டு சரி செய்ய இயலாமல் திணறுவதையும் அவர்கள் கேலி செய்வது ஜோதிகாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் ஒருநாள் மின்கட்டணம் செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் ஜோதிகா, பொழுது போக தனது காதுகளில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு எப்.எம் கேட்டு வருகிறார். சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ஜோதிகா, உடனடியாக பன்பலைக்கு அழைப்பு விடுத்து பேசும் அவர், தனது தாய் கூறியதாக ஹரித்வார் குறித்து தெரிவித்தார். பல அழைப்பாளர்களை தாண்டி, ஹரித்வாருக்கே தங்களை அழைத்துச்சென்றுவிட்டதாக கூறி, ஜோதிகாவுக்கு ஒரு குக்கர் பரிசாக வழங்கப்படுகிறது. முதலில் அதற்கு மாற்றாக டிவி பொட்டி கிடைக்குமா ? என்று அவர் கேட்பது அரங்குகளில் சிரிப்பலையை உண்டாக்க, பின்னர் வேறு வழியின்றி பன்பலை அலுவலகத்திற்கு சென்று, குக்கரை பரிசாக பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பார்க்கும் ”நீங்களும் ஆர்.ஜே ஆகலாம்” என்கிற போஸ்டர், அவரிடம் ஆர்.ஜே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை அதிகரித்தது.

இதற்காக பன்பலை அலுவலகத்தில் போராடி, அவர் அலைப்பேசியில் பேசிய ஆர்.ஜே அஞ்சலி மூலமாக பன்பலை தலைமை பொறுப்பில் இருப்பவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது விருப்பத்தை தெரிவிக்க, அவருக்கு ஆடிஷன் வைக்கப்படுகிறது. ஆர்வமுடன் ஆடிஷனில் கலந்துகொள்ளும் ஜோதிகா , அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.ஜே ஆகவும் ஆகிறார். ஆனால், அவருக்கு இரவு 10 மணிக்கு தான் பணி என்றும், அதுவும் தனிமையில் இருப்போரின் அந்தரங்க தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட, அதை ஏற்று ஜோதிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக உறுதி அளிக்க, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தயாராகிறது. ஆனால் இதற்கு விதார்த் முழுமனதோடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இப்படி ஒரு சூழலில், பள்ளியில் தனது சக நண்பனால் வீடியோ கேம் அடிமை ஆகும் ஜோதிகாவின் மகன் சித்து, சக மாணவன் ஒருவனின் தூண்டுதலில் ப்ளே ஸ்டேஷன் வாங்குவதற்காக ஆசிரியரின் அலைப்பேசியையும் திருடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதேநேரம், நிறுவனத்திற்கு புதிதாக வந்த தனது முதலாளியின் பேரன் நாராயன் லக்கியால், விதார்த் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்.

சித்துவின் பெற்றோர்களை பள்ளிக்கு வரச்சொல்லி உத்தரவு வர, சித்தார்த் – ஜோதிகா ஆகியோர் பள்ளிக்கு சென்றபோது தான், தங்களின் மகன் முறையான கண்காணிப்பு இல்லாமல், ஒழுங்கில்லாமல் வளர்வது அவர்களுக்கு தெரியவருகிறது. இதற்காக எப்போதும் போல தனது சகோதரிகள் மற்றும் தந்தையிடம் திட்டு வாங்கும் ஜோதிகா, தன் கணவர், தந்தை மற்றும் இரு சகோதரிகளின் வற்புருத்தலையும் தாண்டி தனது வேலையை தொடர்வதோடு, தனது மகனையும் தானே கண்காணிப்பதாக உறுதி அளிக்கிறார்.

ஒருநாள் வழக்கம் போல தனது பணியை கவனிக்க வரும் ஜோதிகாவுக்கு அதிர்ச்சியாக வருகிறது அச்செய்தி. தனது மகன் சித்து காணாமல் போய்விட்டதாக விதார்த் அழைக்க, பதறியடித்துக்கொண்டு ஓடும் ஜோதிகா, தனது மகனை கண்டுபிடித்தாரா ? என்பதையும், விதார்த் தன் பணியை தக்கவைத்துக்கொண்டாரா ? என்பதையும் வித்தியாசமான முறையில் வெளிக்கொண்டுவந்துள்ளது இப்படம். அத்தோடு, எப்போதும் தனது சகோதரிகள் மற்றும் தந்தையிடம் திட்டு வாங்கும் ஜோதிகா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதற்கான கேள்விக்கும் இப்படத்தின் திரைக்கதை பதில் சொல்கிறது.

தும்ஹாரி சூளூ என்கிற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமாக இப்படம் இருந்தாலும், ஒரு சாதாரன குடும்ப தலைவிக்கு இருக்கும் சுமைகளையும், அவருக்குள் இருக்கும் சுமைகளையும் இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். இதற்காகவே இவரை பாராட்டலாம்.

குறும்பத்தனம், வெகுளித்தனம் என ஜோதிகா தனது பாத்திரத்தை இப்படத்தில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதோடு, முகம் தெரியாத நபர்களுக்கு ஆறுதல் செல்லி, தனது அன்பை படரவும் வைத்திருக்கிறார்.

கணவன் – மனைவி இடையே இருக்கும் அந்நியோன்யம் என்பது விதார்த் – ஜோதிகா இடையே குறைவாக இருப்பதை இப்படத்தில் காண முடிகிறது. இதில் விதார்த் சற்று அசவுகரியத்துடனேயே நடத்திருப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனாலும் தனது வேலையால் ஏற்படும் அழுத்தம், எப்போதும் உடன் இருக்கும் மனைவி இல்லாமல் ஏற்படும் தனிமை போன்ற காட்சிகளில் தனது நடிப்பை மிகச்சிறப்பாகவே விதார்த் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீலகண்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்.எஸ் பாஸ்கர், வழக்கம் போல தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரம், இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, சாண்ட்ரா எமி ஆகியோரின் நடிப்பும், கதையின் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

கதையின் சில பகுதிகளில் வரும் மனோபாலா மற்றும் மயில்சாமி ஆகியோர், எப்போதும் போல தங்களின் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி படத்திற்கு பலம் சேர்க்க, பின்னணி இசை பலவீனமாக அமைகிறது. பொருத்தமற்ற இடத்தில் வரும் கிளம்பீட்டாலே விஜயலட்சுமி என்கிற பாடல், மேலும் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியில் 100 நாட்களை கடந்து ஓடிய தும்ஹாரி சூளு படத்தை தமிழுக்கு ஏற்றபடி ராதாமோகன் மாற்றி அமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி சுமாராகவே செல்ல, கதாப்பாத்திரங்களின் சூழல்களால் ஏற்படும் நெருக்கடியை மையமாக கொண்டு இரண்டாம் பாதி நகர்கிறது. பொன். பார்த்திபன் வசனங்கள் படத்திற்கு கை கொடுக்க, அன்பிற்கு உறவு பாலமாக அமைகிறது காற்றின் மொழி.

About MoonEmp

Check Also

புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கீடு

மேகதாதூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டப்பேரவை கூடும் சூழலில், 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கான ஒருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *