Saturday , January 19 2019
Breaking News
Home / Exclusive / ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்?

ஊடகப் போட்டி… முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்?

ஊடகப் போட்டி…
முட்டிக் கொள்ளும் ஆடுகள்… ரத்தம் குடிக்கப் போவது யார்?

கடந்த 7ந்தேதி திருச்சி முக்கொம்பில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையில் அனைத்துக் கட்சியினர் தொடங்கிய காவிரி மீட்புப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது நடைப் பயணத்தை கவரேஜ் செய்வதற்காக சென்ற தந்தி டிவியின் செய்தியாளர் விஜயகோபால் தாக்கப்பட்டார். அதனை தடுக்கச் சென்ற திருச்சி பிரஸ் கிளப்பின் செயலாளராக இருக்கும் நியூஸ் 18 திருச்சி மாவட்ட நிருபர் மகேஸ்வரனும் தாக்குதலுக்குள்ளாகி இடது தோள்பட்டை மூட்டு நழுவி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
ஊடக நிறுவனங்கள் இடையேயான போட்டி, ஊடக முதலாளிகளுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான பந்தம் – நன்றிக்கடன், வேலையைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் நிருபர்கள், டிஆர்பியில் மேலே வர வேண்டிய கட்டாயம், சக செய்தியாளர்களுக்கு இடையிலான போட்டி – பொறாமை எல்லாம் சேர்ந்து ஒரு ஜனநாயக நாட்டில் அதன் நான்காம் தூணை ஆட்டிப் பார்த்து அதலபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இது ஏதோ இன்று நேற்று நடந்த நிகழ்வு அல்ல.
ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய, நடுநிலையாளர்கள் – நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தினார்கள். அப்படிப்பட்ட நடுநிலையாளர்கள் தங்களது பத்திரிகையில் ஒரு அரசியல் தலைவரையோ அரசியல் கட்சியையோ பற்றி ஒரு சில வரிகள் எழுதினாலும் மக்கள் அதனை சீரியசாக எடுத்துக் கொண்டார்கள், விவாதித்தார்கள், தங்கள் மனதில் இருத்தினார்கள், அடுத்த தேர்தலில் அந்த அரசியல் கட்சிக்கு உரிய மரியாதையை கொடுத்தார்கள்.
எல்லாத்துறையும் சீர் கெட்ட அதே நேரத்தில் பத்திரிகைத் துறையும் சீர் கெட்டது. முதலில் ஒருசில சீனியர் நிருபர்கள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக தங்கள் நிறுவன முதலாளிகளுக்குத் தெரியாமல் நடுநிலை பிறழ்ந்தனர். தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியல் தலைவர்களின் தவறுகளை மறைப்பது தனக்கு வேண்டிய அரசியல் தலைவருக்கு எதிரணியில் உள்ள அரசியல் தலைவரின் இமேஜை சரிக்கும் வகையில் செய்தி வெளியிடுவது என்ற நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் சில நிருபர்கள் தங்கள் முதலாளிகளுக்கும் ஆதாயம் அல்லது சகாயம் கிடைக்கும் வகையில் காரியங்களை சாதித்துக்கொடுத்து அலுவலகத்தில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
அதன் பரிணாம வளர்ச்சியாக அரசியல்வாதிகள் எளிதில் அணுகக் கூடியவர்களாக ஊடக அதிபர்கள் மாறினார்கள். அதன் உச்சகட்டமாகத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரும்பாலான ஊடக முதலாளிகள் போய் சசிகலாவைச் சந்தித்ததும் அதனைப் படம் எடுத்து எல்லாப் பத்திரிகையிலும் செய்தி வெளிவரும்படி செய்ததும் நடந்தது. `எல்லாப் பத்திரிக்கை முதலாளியும் என்னுடன் நல்ல உறவில்தான் இருக்கிறார்கள். எந்த கட்சியும் எந்த அமைப்பும் எந்த ஒரு தனி மனிதனும் என்னை எதிர்த்து என்ன செய்தாலும் அது இந்த பத்திரிகையில் வராது’ என்பதுதானே இதன் அர்த்தம்? ஒரு ஜனநாயக நாட்டில் நான்காம் தூண் இப்படி அரசியல்வாதியுடன் கை குலுக்கிக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்கிறோம் என்று சொல்வதை விட கேவலமான கேலிக் கூத்து என்ன இருக்க முடியும். தன் நிலை தாழ்ந்து சசிகலா சிறைக்குப் போனதும் எந்த பத்திரிக்கை அதிபரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையே. இப்படியாக ஒரு கட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பு நிலை எடுத்த பத்திரிகை அதிபர்கள் அடுத்து தாங்களும் அரசியல்வாதிகளாக மாறிப் போனார்கள்.
இதனைக் கண்ணுற்ற அரசியல் கட்சிகள் தங்கள் சக்திக்கேற்ப ஒரு ஊடகத்தினை தொடங்கி நடத்த ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் திமுக தலைவரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அடுத்த சில நாட்களிலேயே ஒரு தொலைக்காட்சியைத் தொடங்க காரணமாக இருந்ததையும் தமிழகம் பார்த்தது. இப்படியாக பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் தேசிய கட்சிகள் எல்லாமே தங்களுக்காக ஒரு ஊடகத்தையோ அல்லது தங்களின் சார்பு நிலையில் ஒரு ஊடகத்தையோ நடத்தும் என்ற நிலை வந்தது.
இவர்களுடனேயே பயணப்படும் மக்கள் மட்டும் என்ன மடையர்களாகவா இருப்பார்கள்? அவர்களும் புத்திசாலிகளாக மாறினார்கள். ஒரு நிருபர் பேட்டி எடுக்கும்போது அவர் வைத்திருக்கும் மைக்கில் உள்ளது ஜெயா டிவி லோகோ என்றால் எப்படி பேட்டி கொடுக்க வேண்டும்? சன் டிவி லோகோ என்றால் யாரைத் தாக்கிப் பேசக் கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள்.
அந்தந்த ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்களும் `இது நம் வேலை’ என்று அத்துடன் நில்லாமல் தான் பணிபுரியும் நிறுவனம் சார்ந்திருக்கும் கட்சியின் ஊதுகுழலாகவே மாறிப் போனார்கள். இது அவர்களுக்குள் மோதல்களையும் ஏற்படுத்தியது. தேர்தலில் இந்த கட்சிதான், ஜெயிக்கும் இந்த தலைவர்தான் நல்லவர் என்று சண்டையிட்டுக் கொள்வதில் தொடங்கி மேல் மட்ட பழக்கவழக்கம் உள்ள நிருபர்கள் கூட்டணிகளைப் பேசி முடிவு செய்வது வரையிலும் நடந்தது.
ஊடக நிருபர்களிடையே நடந்த அப்படிப்பட்ட ஒரு மோதல்தான் கடந்த 7ந்தேதி முக்கொம்பில் இருந்து கிளம்பிய நடைப்பயணத்திலும் நிகழ்ந்தது. திமுகவினரின் ஐடி விங் மூலம் வெப் சைட்டில் ஸ்டாலினின் நடைப்பயணக் காட்சிகளை வெளியிடுவதற்காக அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை வரவழைத்திருந்தனர். அவர்கள் வெப்சைட் செய்தி பிரிவின் நிருபர்களா அல்லது சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட தனியார் ஒளிப்பதிவாளர்களா என்பதும் தெரியவில்லை.
நியுஸ் 18 சார்பில் மகேஷ் ஒரு தனி வாகனத்தில் செய்தி எடுக்கப் போயிருந்தார். அதே போல் தந்தி டிவிக்காக விஜயகோபால் ஒரு தனி வாகனத்தில் போயிருந்தார். இன்னும் பல ஊடகவியலாளர்களும் அவரவர் வசதிகேற்ப வாகனங்களில் வந்திருந்தனர். இதில் அவரவர் தொலைக்காட்சிகளில் செய்திகளை முந்தித் தரும் போட்டியில் சென்னை டீமுக்கும் தந்தி விஜகோபாலுக்கும் மோதல் ஏற்பட்டது. அடுத்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் இது குறித்து ஸ்டாலினிடம் மகேஷும் விஜயகோபாலும் முறையிட்டிருக்கிறார்கள்.
இதைக் கண்ணுற்ற அந்த டீம், ஸ்டாலின் நகர்ந்ததும் மீண்டும் அவர்களைத் தாக்கியது. அவர்களுடன் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக வந்த சிஆர்பிஎஃப் ஆட்களும் சேர்ந்து தாக்கியதில் மகேஷின் தோள்பட்டை நழுவி கடும் வேதனையில் துடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அதன் பின்னர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வருகிறார். ஆனால் போலிஸ் புகார் இல்லை; யார் மீதும் நடவடிக்கை இல்லை என்ற நிலையே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஜீயபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லப்பட்டு அதன் உதவி ஆய்வாளர் அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு நேரில் வந்து `எப்ஐஆர் போட்டுடலாமா? ஐஜி கேட்கச் சொன்னாங்க…’ என்று உட்கார்ந்திருக்கிறார். ஆனால் மேலிருந்து சரியான உத்தரவு கிடைக்காததால் மகேஷ் அந்த நடவடிக்கைகளை விரும்பவில்லை.
இதே அதிமுகவின் எடப்பாடி அரசு நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படி நடந்திருந்தால் காவல்துறை இப்படி கேட்குமா? அந்த சம்பவத்தை எப்படி மூடி மறைக்கப் பார்ப்பார்கள். ஸ்டாலினின் நடைப் பயணத்தில் நிருபர் தாக்கப்பட்டதற்கு அவர் மீதும் அவரது ஆட்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டும் இந்த அரசு, அப்போது எப்படி கள்ள மௌனம் காத்திருக்கும்? இதே திமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்தாலும் அதே நிலைதான்.
இந்த சம்பவத்தை பயன்படுத்தி அதிமுகவின் கழக தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலாளர் எஞ்ஜினியர் கேசவன் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் நேர்மையான பத்திரிகையாளர்கள் இருவருக்கும் நேர்ந்த அவலம் இது… ஊடகத்துறைக்கே களங்கம் இது, ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய தருணம் இது… பத்திரிகையாளர்களை பெரிதும் மதிக்கும் மக்கள் செல்வர் திரு டிடிவி தினகரன் MLA யின் அருகில் இருந்து பார்த்தவன் நான்… என்றெல்லாம் கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கூடிய அதே கட்சியினர் டிடிவி தினகரன் பேசுவதைக் கூட சரியாக கவரேஜ் செய்ய விடாமல் பத்திரிகையாளர்களை நெருக்கி தள்ளி உண்டு இல்லை என்றாக்கி விட்டார்கள். மதுரையிலிருந்து வந்திருந்த ஆட்கள் நிருபர்களுடனும் கேமரா மேன்களுடன் மல்லுக்கட்டி பேசிய வார்த்தைகள் இங்கே எழுத முடியாதவை. பலரது கேமரா, மைக், ஸ்டாண்டு உள்ளிட்ட சாதனங்கள் சேதமாகிப் போயிருந்தது.
இப்படி இந்த நேரத்தில் அறிக்கை விட்டு தன் அரசியல் எதிரியை காலி செய்வதும் பத்திரிகையாளரின் புகார் மூலம் அந்த அரசியல் கட்சித் தலைவர் நடத்தும் போராட்டத்தின் வெற்றியை சீர் குலைப்பதும் இந்த அறிக்கையாளர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எந்த சதிக்கும் ஆட்படாமல் – தன்னை பிறர் பயன்படுத்திக்கொள்ள விடாமல் காத்துக் கொண்டார் மகேஷ்.
ஒரு பத்திரிகையாளர் தாக்கப்படும்போது அவர் புகார் கொடுப்பதற்குக்கூட தன் நிறுவனத்தின் ஒப்புதலைக் கேட்க வேண்டியிருக்கிறது. அந்த நிறுவனம் ஒத்துக் கொண்டால்தான் புகார் தர முடியும். இல்லாவிட்டால் நியாயமே இருந்தாலும் புகாரளிக்க முடியாது என்ற அளவுக்கு சுதந்திரமாகச் செயல்படும் இவர்கள்தான் சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஒரு வேளை ஒரு அரசியல் கட்சியால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்து அதனை அந்த அரசியல் கட்சியின் தலைவர் விரும்பாவிட்டால் நேரே ஊடக நிறுவனத்தின் தலைமையிடம் பேசுவார். உடனே அந்த ஊடக நிறுவன தலைவர் சம்பந்தப்பட்ட நிருபரை வேலையை விட்டு நீக்கி பலி கொடுத்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. அரசியல்வாதிகளும் ஊடக அதிபர்களும் அத்தகைய உறவில்தான் இப்போதும் இருக்கிறார்கள்.
இதில் களத்தில் போராளிகளாக வளம் வரும் ஊடகத்தில் பணிபுரிவோர் நிலைதான் மோசம். போராட்டக்காரர்களுக்கு ஒருநாள்தான் போராட்டம் என்றால் பத்திரிகையாளர்களுக்கு தினம் தினம் போராட்டம்தான். `அந்த சேனலில் ஸ்க்ராளிங் போட்டுட்டான், நீங்க எங்க இருக்கிங்க?’ என்று உப்புசப்பில்லாத செய்தியை பற்றிக் கேட்பார்கள். அதே சமயம் முதல்நாள் இவர் அனுப்பிய ஒரு முழு ஸ்டோரி குப்பைக்குப் போயிருக்கும். தனது ஆளுகைக்குட்பட்ட, தனக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் ஏதாவது நடந்து விடுமோ நமக்குத் தகவல் வராமல் போய் விடுமோ என்று ஒவ்வொரு நொடியும் போனையும் வாட்சப்பையும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மன அழுத்தம் உடலின் அனைத்து அவயவங்களையும் ஆட்டிப் பார்க்கும் அளவுக்கு இருக்கிறது.
இத்தகைய அழுத்தங்களைத் தாங்க முடியாத உடல்நிலை ஏற்படும்போதோ அல்லது இயல்பாகவே நாற்பது வயதைக் கடக்கும்போதோ அந்த நிருபரை அவருக்கு சம்பந்தமில்லாத ஊருக்கு பணி மாறுதல் செய்து வேலையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் செய்யும் நிலையும் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் நிருபர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனால்தான் அடித்துப் பிடித்தேனும் எக்ஸ்க்ளூசிவ் செய்தி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் செய்தியாளர்கள் உள்ளனர். இதன் விளைவுதான் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்ற நிலை மாறி பத்திரிகையாளர்களுக்குள்ளேயே தாக்குதல் என்ற பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
மொத்தத்தில் மீடியா வேலை என்பது முன்னைப் போல் அன்றி யாரும் நிம்மதியாய் இருக்க முடியாத ஒரு சுமையாக மாறிக் கொண்டிருப்பதென்னவோ உண்மை. இந்த நிலை தொடர்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதே நடுநிலையாளர்களின் கவலையாக இருக்கிறது.

-ஷானு.
12.04.2018.

About admin

Check Also

மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும்  கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாகக் கூறப்பட்டு வந்தன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *