`இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்காகவும் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாப்பதற்காகவும் களத்தில் இறங்கி போராடுபவர்களை கொல்ல, மெலானோமா என்ற கிருமியை அவர்களின் உடலில் புகுத்தும் சதியை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. நம்மாழ்வாரிளிருந்து ஒவ்வொருவராக நாம் பலி கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். இதற்கு நானும் பலியாகிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி நம்மை அதிர வைத்தார் பாரம்பரிய நெல் ரகங்களை காக்க, `நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பை நடத்தும் திருத்துறைப்பூண்டி `நெல் ஜெயராமன்’.
அதிர்ச்சியுடன் அவரைச் சந்தித்தோம். ஆறடிக்கும் மேல் உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்த அவர் தற்போது இந்த கேன்சர் நோய் தாக்கியதில் மெலிந்து போயிருந்தார். இந்த நோய்க்காக எடுத்துக் கொண்ட மருந்துகளின் வீரியத்தால் முகம், கை, கால், உதடு, பகுதிகளில் வெண்மையான புள்ளிகள் தோன்றி தோற்றத்தை மேலும் சிதைத்திருக்கிறது.
“இன்று இந்திய விவசாயத்தில் மான்சாண்டோ விதைகளின் ஆதிக்கம் இருப்பது நமக்குத் தெரியும். இந்திய அரசின் சட்டங்களும் இந்திய விதைகளை அழிச்சுட்டு அந்நிய விதைகளை புகுத்தும் விதமாகவே இருக்கு.
இங்குள்ள ஒரு விவசாயி ஒரு பாரம்பரிய நெல்லை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தன்னுடைய நிலத்துக்கான சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னையில் உள்ள விதை ஆய்வாளரிடம் போய் காண்பித்து அனுமதி பெற்றுத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அனுமதி இல்லாமல் வைத்திருந்தால் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருப்பவர்களுக்கு என்ன விதமான தண்டனையோ அதே போன்ற தண்டனை தரும் விதத்தில் உள்ளது சட்டம்.
பாரம்பரிய நெல் ரகங்கள் உணவு மட்டுமல்ல அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே பசுமைப்புரட்சி என்னும் பெயரால் நம்நாட்டு நெல் ரகங்கள் பல அழிந்து போய் விட்டன. நம்மாழ்வாரின் முயற்சியால் அவற்றை மீட்டு வருகிறோம்.
ரசாயன உரம், பூச்சிக் கொல்லி, கலைக் கொல்லிகளுக்கு எதிராக கடந்த 50 ஆண்டுகளாக நம்மாழ்வார் போராடி வந்திருக்கிறார். அவரும் இறப்புக்கு முன்னர் கடுமையான நோய் தாக்குதலுக்குள்ளாகி நிறைய வைத்தியங்களுக்குப் பின்னர்தான் இறந்தார்.
ஓடிஸ்ஸாவில் உள்ள கட்டாக்கில் அமைந்திருக்கும் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக ரிச்சாரியார் என்பவர் இருந்த போது அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சி.சுப்பிரமணியம் நம் நாட்டில் உணவுப் பஞ்சம் வரப் போகுது நம் நாட்டு நெல் ரகங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து மேம்படுத்தி கொண்டு வரனும். அதுக்கான திட்டம்தான் பசுமைப்புரட்சி என்று சொன்னார்.
நான் 2200 வகை பாரம்பரிய நெல் வகைகளை மேம்படுத்திவிட்டேன், பசுமைப்புரட்சி தேவையில்லை என்று சொன்னார். அவரைப் பைத்தியம் என்று சொல்லி மருத்துவமனையில் போட்டார்கள். பின்னர் கோர்ட்டுக்குப் போய் தன்னை பதவி நீக்கம் செய்தது தவறு என்று நிரூபித்து வருவதற்குள் சாமிநாதனை இயக்குனராக போட்டு நமது நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்குக் கொண்டு போய் ஏதோ செய்து பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட நெல்வகைகளை பரப்பி விட்டார்கள்.
நானும் அதே வகையில் பாரம்பரிய நெல் வகைகளை மீண்டும் கொண்டுவர போராடிக் கொண்டிருக்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் எனக்கு உடல்நலம் இல்லாமல் பாய் சென்னை அப்பல்லோவில் வைத்து சிகிச்சை செய்தார்கள். பல முக்கியஸ்தர்களின் நிதி உதவியோடு ஊசி மருந்துக்கு மட்டும் 45 லட்சம் செலவு செய்து மீண்டிருக்கிறேன். நடிகர் சிவகுமார், ரோகினி உள்ளிட்ட பலரின் நேரடி கவனிப்பில் இருந்ததால் நான் இன்னைக்கு உயிரோட இருக்கிறேன்.
காங்கிரஸ் அரசில் ஜெயராம் ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும்போது மரபணு மாற்றப்பட்ட கத்தரியை அனுமதிக்கலாமா என்பது குறித்து நாட்டில் பத்து மண்டலங்களில் ஆய்வு செய்து ஏழை முதல் பணக்காரன் வரை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் கத்தரியில் மரபணு மாற்றத்தை அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கை கொடுத்தார். உடனே அவர் பதவியிழக்கிறார்.
இப்படி பன்னாட்டு கம்பெனிகளின் கருத்துக்கு மாற்றான கருத்து கொண்டவர்கள் ஏதாவது ஒரு மர்மமான முறையில் முடக்கப்படுவது தொடர்கிறது. என்னைப் போல் மெலானோமா கிருமி தாக்குதலுக்குள்ளானவர்கள் இந்தியாவில் 11 பேர் மட்டுமே. அவர்கள் அனைவருமே வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்கள். அதிலும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள். இதைப்பற்றி என் வெளிநாட்டு நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் இந்த கிருமியை ஊசி மூலமாக மட்டுமல்லாது உணவு மூலமாகவும் செலுத்த முடியும் என்று சொன்னார்கள். அதன் பின்னர்தான் சென்னையில் ஒரு தனி மருத்துவக் குழுவிடம் சொல்லி இது குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதன் முடிவில்தான் இந்த சதி குறித்து முழுமையாக தெரிய வரும்.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் திணிக்கப்பட்ட மலட்டு பயிர் ரகங்கள், அவைகளுக்கு பூச்சிக்கொல்லியாகவும் உரமாகவும் களைக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள், இதனால் அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டு நெல் மற்றும் பயிர் இனங்கள் இப்படி ரசாயனங்களை பயன்படுத்தியதால் நோய்வாய்ப்பட்ட மனித இனம், அதற்காக கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க அளவில் வளர்ந்து விட்ட மருத்துவத்துறை எல்லாம் சேர்ந்து மனிதனை நடமாடும் நோயாளியாக்கி காசு பிடுங்கத்தான் அலைகின்றனர் பன்னாட்டு நிறுவனங்கள்” என்று பகீர் தகவல்களைச் சொல்லி முடித்தார் அவர்.