Saturday , January 19 2019
Breaking News
Home / Uncategorized / பணிநியமன ஊழல்! தனியார் வங்கிக்கு சேவகம்! ஏ.ஜி.அருண் கோயல் சிக்கியது எப்படி?

பணிநியமன ஊழல்! தனியார் வங்கிக்கு சேவகம்! ஏ.ஜி.அருண் கோயல் சிக்கியது எப்படி?

2ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி.தான் முதலில்
வெளிக்கொண்டு வந்தது. அப்படிப்பட்ட அதிகாரத்தையே தட்டிக்கேட்கும்
இடத்தில் இருக்கும் சி.ஏ.ஜி.யின் கிளையில்தான் ஒரு ஊழல் பெருச்சாளி
தற்போது சிக்கியுள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டம் 148 முதல் 151 வரை கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்
ஜெனரல் எனப்படும் சி.ஏ.ஜி.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்
தலைவராக நாட்டிற்கே ஒருவர்தான் இருப்பார். அரசின் திட்டங்களையும், வரவு
செலவுகளையும் ஆடிட் செய்யும் அதிகாரம் கொண்ட பதவி இது. அதன் கிளைகள்
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட
அளவில் தலைமை கணக்காயர்கள் இருப்பார்கள்.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5 தலைமை கணக்காயர்கள் உள்ளனர். அதில்
நான்கு பேர் ஆடிட் எனப்படும் தணிக்கை துறையை கவனித்து வருகிறார்கள்,
ஒருவர் மட்டும் அக்கவுண்ட்ஸ் எனப்படும் வரவு செலவுகளை கவனித்து
வருகிறார். அந்த ஒருவர்தான் இப்போது சி.பி.ஐ.யிடம் சிக்கியிருக்கும்
அருண் கோயல். அப்படி என்ன ஊழல் செய்தார்? என விசாரணையில் இறங்கினோம்.

யார் இந்த அருண் கோயல்?

ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அருண் கோயல், பி.டெக் படித்துவிட்டு இந்தியன்
ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் செர்விஸ் தேர்வு எழுதி குரூப் ஏ அலுவலராக
ராஜஸ்தானில் பணியாற்றினார். பல்வேறு துறை அலுவலகங்களில் கணக்கு பிரிவில்
பணியாற்றிய அருண், கடைசியாக ராஜஸ்தான் மாநில தலைமை கணக்காயராக 2015க்கு
முன்பு பணியாற்றினார்.

அவருடைய மனைவி லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராஜஸ்தானில் வீட்டுவசதி
நிதி கழகத்தில் அலுவலராக வேலை செய்து வந்தார். அப்போது அருண் பணம்
பெற்றுக்கொண்டு முகவரி இல்லாத இடங்களில் வீடு கட்டுவதற்கு கடன்
கொடுக்குமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். அது வெளியில் தெரிந்து
அருணின் மனைவி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கும்
பணி நியமனத்துக்கு பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்ததாக அருண் மீதும்
வழக்கு பதிவாகிறது. இதனால் அங்கிருந்து தமிழகத்துக்கு இடமாற்றம்
செய்யப்படுகிறார் அருண். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி. அலுவலகத்தில் தலைமை கணக்காயராக வேலைக்கு
சேருகிறார்.

செய்த ஊழல்கள்!

அருண் கோயலின் தகிடுதத்தங்கள் குறித்து தேனாம்பேட்டை ஏ.ஜி. அலுவலக
அதிகாரிகளின் வாயைக் கிளறினோம். “சென்னைக்கு வந்ததும் அவர் செய்த முதல்
வேலை, அதுவரை கோட்ட கணக்கு அலுவலர் பதிவிகளை நிரப்பிவந்த துணை தலைமை
கணக்காயர்களை அதில் தலையிட வேண்டாம் என கறாராக கூறியதுதான்” என
நிருத்தியர்கள், தொடர்ந்து பேசுகையில், “தனக்கு தோதான ஆள் ஒருவரை
தேடியபோதுதான், கோட்ட கணக்கு அலுவலர் பதவியில் இருந்து ஓய்வூதிய
பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றுவந்திருந்த கஜேந்திரன் என்பவரை பிடித்தார்.
அவரை மறுபடியும் பதவி உயர்வு கொடுத்து சீனியர் கணக்கு அலுவலர்
பொறுப்புக்கு கொண்டுவந்தார்.

தமிழக பொதுப்பணித்துறையில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட கோட்ட கணக்கு
அலுவலர் பணிகள் காலியாக இருந்தன. பொதுப்பணித்துறை மூலம் கட்டிடம் கட்ட
டெண்டர் கொடுப்பதில் இருந்து கட்டி முடித்து கணக்கு வழக்குகளை
சரிபார்த்து சான்றிதழ் கொடுப்பது வரை கோட்ட கணக்கு அலுவலரின் பணிதான்.
பொதுப்பணித்துறை பொதுவாகவே பணம் கொழிக்கும் துறை, சதவீத கணக்கில்
லகரங்கள் கைமாறும் துறை என்பதால் கோட்ட கணக்கு அலுவலர் மூலம் ஒவ்வொரு
டெண்டருக்கும் காசு பார்க்க ஆசைப்பட்ட அருண் கோயல், அப்பதவிகளை நிரப்ப
முடிவு செய்தார்” என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், “80 கோட்ட கணக்கு அலுவலர் பதவிக்கும் ஆட்களைப்
பொறுத்து இராடரை லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயம்
செய்தார். அனைவரிடமும் பேசி பணத்தை பெற்று அருணிடம் ஒப்படைத்து, பணம்
கொடுத்தவர்களுக்கு பணி நியமனம் செய்து கொடுப்பவர் கஜேந்திரன். இதில்
யாருமே யோசிக்க முடியாத ஒன்றையும் செய்தார் அருண்” என புதிர்
போட்டவர்கள், “விட்டுப்போன சில கோட்டங்களுக்கு ஆட்களை நியமிக்க மாட்டார்,
அதனை அருகில் உள்ள கோட்ட கணக்கு அலுவலரை கவனிக்க சொல்வார். அவர்களும்
அடித்தது யோகம் என இரு இடங்களில் வசூல் செய்து, விசுவாசமாக அதில் ஒரு
பங்கை அருணுக்கு அனுப்பி விடுவார்கள்.

இதுமட்டுமல்ல, ஏ.ஜி. ஊழியர்களுக்கு என கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று
செயல்படுகிறது, அதில் மூவாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர், 68 கோடி
ரூபாய் பணம் இருப்பு உள்ளது. அந்த சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டு சாவியை
தன்னிடம் கொடுக்குமாறு அதன் இயக்குனர்களிடம் கூறினார் அருண். அதற்கு
அவர்கள் மறுக்கவே, அவர்களுக்கு மெமோ கொடுப்பது, இடமாற்றம் செய்வது என
வஞ்சித்தார்.

இவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்பதால் அவர் கைதான அதே மார்ச் 23-ம்
தேதி வெள்ளியன்று சங்க அலுவலகத்தை பூட்டுப்போட சென்றார் அருண். அது
தெரிந்து ஊழியர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வளாகத்தில் போராட்டம்
நடத்தினோம். இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பினார். அப்போதுதான்
சி.பி.ஐ.யும் சரியாக உள்ளே வந்து அருணை கைது செய்தது” என
விளக்கமளித்தனர்.

அருண் கோயல் மீது பல முறை புகார் அளித்துள்ள முன்னாள் கணக்கு அலுவலரும்,
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளருமான துரைப்பாண்டியனிடம்
பேசினோம். “அருண் ராஜஸ்தானிலேயே ஊழல் செய்தவர் என்பதால் அவரை பதவி
நீக்கம் செய்து தண்டனை கொடுத்திருக்கணும், ஆனால் வெறும் இடமாற்றம்
மட்டுமே செய்தனர். அருணின் ஊழல்கள் குறித்து 2016 இருதியிலேயே நாங்கள்
தெரிந்துகொண்டோம், அப்போதே அவருக்கு எதிராக செயல்பட தொடங்கினோம்.

2017 அக்டோபர் மாதம் அவர் மீது விசாரணை நடத்தக்கோரி குடியரசு
தலைவருக்கும், சி.பி.ஐ.க்கும் கடிதம் எழுதினோம். அவரைக் கண்டித்து
போராட்டமும் நடத்தினோம், ஆனால் அப்போதெல்லாம் அவரை விட்டுவிட்டனர்.
இப்போதாவது அவர் சிக்கியிருக்கிறாரே என்பதை பார்க்கும்போது மன நிறைவாக
உள்ளது. ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பிலேயே ஊழல்
செய்தால் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? அவர் பணியில் சேர்ந்தது முதல் 2
ஆண்டுகள் அவர் செய்த அலுவலக செலவுகள், பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ.
விரிவான விசாரணை நடத்திட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

எப்படி சிக்கினார் அருண்?

சிக்கியது பற்றி நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத ஒரு கணக்கு அலுவலக
அதிகாரி, “சி.பி.ஐ.யிடம் முன்பே முறையிட்டோம், நாங்கள் கொடுத்த புகாரை
அந்த சி.பி.ஐ. அதிகாரி நேரடியாக அருணிடமே கொண்டுபோய் கொடுத்த
கூத்தெல்லாம் நடந்திருக்கிறது. இந்நிலையில்தான் தொழிலாளர் வைப்பு நிதி
அலுவலகத்தில் ஒரு ஊழல் வழக்கில் இருவர் கைதாகினர். அதுபற்றி
விசாரித்தபோது ‘சத்திய’மான பெயர் கொண்ட ஒரு நேர்மை அதிகாரிதான் கைது
செய்தது தெரியவந்தது, எனவே அவரை நேரில் சென்று அணுகினோம்.

அவர் அருண் கோயல், கஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் தொலைப்பேசி தொடர்பு எண்ணை
கேட்டுப்பெற்றார். அதன் பின் அவர்களுக்குள் நடந்த உரையாடல்கள் அனைத்தும்
சி.பி.ஐ.யால் ட்ராப் செய்யப்பட்டது. அப்போதுதான் ராஜா என்பவருக்கு பணி
நியமனம் பெறுவதற்காக சிவலிங்கம் மற்றும் ராஜா ஆகியோர் கஜேந்திரன் மற்றும்
அருணிடம் டீலிங் பேசியது தெரியவந்தது. உடனடியாக அந்த அதிகாரி சிவலிங்கம்,
ராஜா இருவரையும் பிடித்து, ‘உனக்கு வேலை வாங்கி தருகிறோம், பணத்தையும்
திரும்ப பெற்றுத் தருகிறோம், அப்ரூவராக மாறி விடுங்கள்’ என கூறி, பணத்தை
கொடுத்தனுப்பி பின்னாலேயே சென்று மடக்கிப் பிடித்தார் அந்த சி.பி.ஐ.
அதிகாரி” என விவரித்தனர்.

இன்னும் இரு ஊழல்கள்?

இவை இரண்டு மட்டுமின்றி இன்னும் இரு ஊழல்கள் இருப்பதாக பற்றவைக்கிரார்கள்
முன்னாள் ஏ.ஜி. ஊழியர்கள். அவர்களிடம் பேசியபோது, “தமிழக
நெடுஞ்சாலைத்துறையில் உள்ள கோட்ட கணக்கு அலுவலர் பணிக்காக சி.ஏ.ஜி. துறை
சார்பில் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி
நியமனம் வழங்கப்படும். அதிலும் கை வைக்க விரும்பிய அருண், அவரே கேள்விகளை
தயார் செய்து தேர்வையும் நடத்தி, அவரே திருத்தவும் செய்துள்ளார்.
திருத்தும் பணியின்போது யார் வைட்டமின் ‘ப’ கொடுத்துள்ளார்களோ
அவர்களுக்கு மட்டும் பாஸ் போட்டு வேலை கொடுத்துக்கிறார் என
கூறப்படுகிறது.

மேலும், தலைமைக் கணக்காயர் அலுவலக ஓய்வூதியதாரர்களின் பணமெல்லாம்
எஸ்.பி.ஐ. வங்கியில்தான் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அருண்
கோயல் அதனை 1997ல் போட்ட ஒரு அரசாணையை வைத்துக்கொண்டு அந்த கணக்குகளை
தனியார் எச்.டி.எப்.சி. வங்கிக்கு மாற்றினார். எஸ்.பி.ஐ.யில் இருந்தவரை
டெபாசிட் பணத்துக்கான வட்டி அரசுக்கு சென்று கொண்டிருந்தது, தனியார்
வங்கிக்கு மாற்றியதும் அந்த பணத்துக்கான வட்டி அரசுக்கு போகாது. அதைப்
பயன்படுத்தி வட்டியில் இருந்து குறிப்பிட்ட அளவு கமிஷன் தொகையை எந்தவித
கணக்கு வழக்குகளும் இல்லாமல் எச்.டி.எப்.சி. வங்கி அருண் கோயலுக்கு
கொடுத்து வந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஊழல்கள்
குறித்து இன்னும் சி.பி.ஐ.க்கே தெரியாது” என முடித்துக்கொண்டனர்.

வேளியே பயிரை மேய்ந்த கதையாக ஊழல்களை வெளிக்கொண்டு வர வேண்டிய இடத்திலேயே
ஊழலா என வியப்புதான் ஏற்படுகிறது. இன்னும் எத்தனை விதமான ஊழல்கள்
நாட்டில் இருக்கிறதோ!
===========================

About admin

Check Also

Obtenir Glucotrol – Livraison gratuite dans le monde

Obtenir Glucotrol Générique Glucotrol Comment Se Procurer Du Glipizide En Pharmacie. Glucotrol est utilisé pour …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *