Saturday , February 16 2019
Breaking News
Home / Exclusive / மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

மரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும்  கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாகக் கூறப்பட்டு வந்தன.  ஆசிரியர் – ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி, புதிய பாட திட்டம் தொடங்க அனுமதி, போலியாகத் தொடங்கப்பட்ட  தொலைதூரக் கல்வி தேர்வு மையங்களுக்கு முறைகேடாக சென்டர் கோடு வழங்கியது, தேர்வுக்கான விடைத்தாள்கள் வாங்கியதில் மோசடி உள்ளிட்ட பல முறைகேடுகள் குறித்த புகார்கள் ஆதாரங்களுடன் பலகலைக் கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கும் அனுப்பப்பட்டன.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடையவர்களில் முதன்மையானவர்களாக பல்கலையின் அப்போதைய துணை வேந்தர் சுவாமிநாதன், அப்போதைய பதிவாளர் முனைவர் அங்கமுத்து ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். இதில் துணை வேந்தர் பணிக் காலம் முடிந்து சுவாமிநாதன் விடைபெற்றுச் சென்று விட,  தனது பதிவாளர் பதவி முடிந்த பிறகு மீண்டும் அதே பல்கலையின் உடற்கல்வி இயக்குனராக அங்கமுத்து பணியில் தொடர்ந்தார். அத்துடன், காலியாக இருந்த  துணைவேந்தர் பதவிக்குக் குறி வைத்து அதற்காக காய்களையும் நகர்த்தி வந்தார்.  இதன் காரணமாக துணைவேந்தர் பதவிக்கான தகுதியடையவர்களின் பட்டியலில் அங்கமுத்துவின் பெயரும் இடம் பெற்று இருந்தது. எப்படியாகிலும் எவ்வளவு செலவு செய்தாகிலும் துணைவேந்தர் பதவியைக் கைப்பற்றிவிடும் முயற்சியில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் அங்கமுத்துவுக்குப் பிறகு பல்கலைக் கழகத்தின் புதிய பதிவாளராகப் பொறுப்பேற்ற  பதிவாளர் மணிவண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் பெரியார் பல்கலைக் கழகத்தின் வேலைக்கமர்த்தப்பட்ட பணியாளர் பட்டியல் உள்ளிட்ட பல முக்கியமான ஆவணங்கள் காணாமற் போனதைக் கண்டுபிடித்தார். பிறகு, உயரதிகாரிகள் ஒப்புதலுடன் இது குறித்து முன்னாள் பதிவாளர்  அங்கமுத்து உள்ளிட்ட சிலர் மீது பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 16ந் தேதி சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில்  புகார் செய்தார்.

நவம்பர் 17ந் தேதி பெரியார் பல்கலைக்கழகத்துக்கு அதன் வேந்தரான தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவிருந்த நிலையில் தன் மீது போலீசில் புகார் தரப்பட்டதையறிந்த அங்கமுத்து, ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனது  இல்லத்துக்குச் சென்று விட்டார். 18ந் தேதி காலையில் தனது வீட்டில் அங்கமுத்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடல் உபாதையின் காரணமாக அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது வீட்டார் தரப்பில் முதலில் சொல்லப் பட்டது.

இறப்பதற்கு முன்பாக தனது தற்கொலைக்கான காரணங்களை விளக்கி மரண வாக்குமூலமாக  அங்கமுத்து ஏழுபக்கக் கடிதத்தினை எழுதி இருந்தார் எனவும், இந்தக் கடிதத்தினை அவரது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர் என்றும் அதற்கடுத்த சில நாட்களில் பரபரப்பூட்டும் தகவல்கள் வெளியாயின. கடிதத்தின் ஒரு சில பகுதிகளின் முக்கிய பகுதிகள் மட்டும் அவ்வப்போது கசியவிடப்பட்டன என்ற போதிலும் அதில் இடம் பெற்றிருக்கும் முழுமையான தகவல்கள் ரகசியமாகவே காக்கப்பட்டன. அதில் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன்தான், அங்கு நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் காரணம் என்று அதில் கூறப்பட்டு இருந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்கொலை  செய்து கொண்ட முன்னாள் பதிவாளர்  அங்கமுத்துவின் ஏழு பக்க மரணவாக்குமூலத்தின் பிரதி ஒன்று நமக்கும் அண்மையில் கிடைத்தது. தனது குற்றங்களை ஒப்புக் கொள்ளும் அங்கமுத்து அது யாருடைய தூண்டுதலில் செய்யப்பட்டது என்பதையும், பல்கலையின் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யார் என்ற பட்டியலையும் குறித்துத் தெளிவாக எழுதி இருந்தார். அதிர வைப்பதாக இருந்த அந்த மரண வாக்குமூலத்தின் முழு விபரம் இதோ நமது வாசகர்களுக்காக…..

“எனது தற்கொலைக்குக் கீழ்க்கண்டவர்களே காரணம். அவர்கள் செய்த பாவச்செயலுக்கு நான் பலிகடா வாக்கப்பட்டுள்ளேன்” என்று தொடங்குகிறது அந்தக் கடிதம். மேலும் அந்தக் கடிதத்தில், “இதில் முக்கிய இடம் வகிப்பவர் பெரியார் பல்கலைக் கழத்தின் முன்னாள் துணைவேந்தர் மாபெரும் திருடன், சுவாமிநாதன் செய்த பாவங்களுக்கு உறுதுணையாக இருந்த காரணத்தினால்தான் நான் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அவர் செய்த பாவங்கள் பின்வருமாறு….”  எனத் தொடர்கிறார்.

சுவாமிநாதன்  16.06.14 அன்று துணைவேந்தர் பதவியேற்றார். அதற்குப் பின் நிரப்பப்பட்ட பெரியார் பல்கலக்கழக ஆசிரியர் பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 25 இலட்சம் முதல்,  45 இலட்சம் வரை பெற்றுக் கொண்டுதான் பதவி வழங்கினார். இதற்கு நானும் உடந்தையாக இருந்தேன். மேலும், அவரது பணிக் காலத்தில் புதிதாக கல்லூரிகளுக்கு இணைவு வழங்க குறைந்தது 10 இலட்சமாவது வாங்கிக் கொண்டுதான் கை எழுத்துப் போட்டார்.

மேலும் தொடங்கப்படும் நியூ கோர்ஸ் ஒன்றுக்கு ஒரு லட்சம் வீதம் பணம் கல்லூரிகளிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளேன். மேலும், விடைத்தாள்கள் வாங்குவதில் மாபெரும் மோசடி செய்துள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் விமலா பேப்பர், மதுரை என்பவரிடம் மட்டும் ரூபாய் 85 இலட்சம் லஞ்சமாகப் பெற்றுள்ளனர்.

நாமக்கல் கிங் கல்லூரியில் காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய தேர்வுகளை 9.45 மணிக்கே ஆரம்பித்தனர். அதை நானும், பல்கலைக்கழக நூலகர் சுப்ரமணியமும் நேரில் ஆய்வு செய்து கண்டுபிடித்தோம். அதன் பிறகு அந்த கல்லூரியின் தேர்வு மையத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பித்தோம். ஆனால், அவர்களிடம் பத்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு துணைவேந்தர் சுவாமிநாதன் அந்த ஆணையை ரத்து செய்தார்.

(இந்தப் பத்தி முக்கியமானது என குறியீடு இடப்பட்டுள்ளது) நான் தற்கொலை செய்து கொள்வதற்கு முழுக் காரணமும் அவர் தான். ஏனென்றால், அவரது பணிக்காலத்தில் நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும். அந்த நேர்காணல் குழுவின் பரிந்துரைகளை (Minutes of the selection committee) அவர் தன்னுடன் கொண்டு சென்று விட்டார். அதுதான் எனக்குத் தற்போது சிரமத்தை உண்டாக்கியுள்ளது. அவரிடம் இருந்து அதைக் கைப்பற்றுங்கள்… மேலும், நான் அவருக்கு சுமார் பத்து கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அதே போல, என்னுடைய பதிவாளர் பணிக்காலம் முடிந்த பின்னர் அவரால் போடப்பட்ட பணியாளர்கள் மூலமாக மட்டும் 15 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். அதனால் தான் அந்தக் கோப்புக்கள் அனைத்தையும் அவர் கொண்டு சென்று விட்டார்.

மேலும், தற்போதைய பதிவாளர் மணிவண்ணன் அவர்கள்…. அவர் பதவியேற்ற பின் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு அவரும் உடந்தை. மேலே குறிப்பிட்டுள்ள கோப்புகளை அவர் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். என் மீது வீண்பழி சுமத்தும் விதமாக 07.01.2016   மற்றும் 20.01.2016  ஆகிய தேதிகளில் அலுவலக உதவியாளர்கள் நெல்சன், இராசமாணிக்கம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு 30.10.2017-அன்று எனக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதில், Teaching and non-teaching appointment  Files, 23 consolidated staff files ஆகியவை காணவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், உண்மையில் non-teaching appointment  Files அவரிடத்தில் தான் உள்ளது என்று சிண்டிகேட்டில் Sridhar – Asst கூறியுள்ளார். 23 consolidated staff files நெல்சன் மற்றும் குழந்தைவேலு ஆகியோரிடம்தான் உள்ளது. இதை விசாரித்து உண்மையைத் தெரிந்து கொள்ளவும். எனவே, காவல்துறையினர் உண்மையை தீர விசாரிக்க வேண்டும். எனக்கு மன உளைச்சலைக் கொடுத்த மேற்கூறியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டு வரும் V.Krishnahema,  S.Anbalagan மற்றும் அவரது Group யாரும் உருப்பட மாட்டார்கள்.

எனது மறைவிற்கு தயவுசெய்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாரும் துக்கம் விசாரிக்க எனது வீட்டுக்கு வர வேண்டாம். எனக்கு இதுநாள் வரையில் நல்ல உறுதுணையாக இருந்த லைப்ரரியன் என். சுப்ரமணி மற்றும் எனது நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.

என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சுவாமிநாதன், மணிவண்ணன், நெல்சன், குழந்தைவேல், ராஜமாணிக்கம்  வசம் தான் அனைத்து Teachers Fileகளும் உள்ளன, எனவே ராஜமாணிக்கத்தைத் தனியாக விசாரிக்கவும். இதுவே எனது மரண வாக்குமூலம் ஆகும். மேலும் எனது குடும்பத்தில் உற்றார் மற்றும் உறவினர்கள் என்னை மன்னிக்கவும்.

பெரியார் பல்கலைக் கழகத்தில் சிங்கம் போல இருந்த என்னை 13.11.2017 அன்று நடைபெற்ற சிண்டிகேட் மீட்டிங்கில் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

மேலும், Exam Result போடுவதில் Computer அரவிந்த், சென்னை வசம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர், சுவாமிநாதனும், லீலாவும். பாரதியார் பல்கலைக்கழகத்தில் PG Centre Erodeல்  MBA Deptல் பணிபுரியும் முருகானந்தம் என்பவர் MBAவில் 52% மார்க்தான் வைத்துள்ளார். இருப்பினும், ஜேம்ஸ் பிச்சை வசம் சொல்லி அவருக்குப் போஸ்டிங்  வாங்கிக் கொடுத்துள்ளார் சுவாமிநாதன். என்னால் பெரியார் பல்கலைக் கழகத்தில் பயன் பெற்றவர்கள் நீழி வாழ்க!

இந்த கடிதத்தில் உள்ளது யாவையும் உண்மையானது என அறிவித்து இதை எனது மரண வாக்குமூலமாக பாவித்துக் கொள்ளவும்.

எனது குடும்பத்தார் அனைவரும் என்னை மன்னிக்கவும். இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மீண்டும் ஒருமுறை இவ்வுலகில் பிறக்க நேரிடின் மனிதனாகப் பிறக்க விரும்பவில்லை.தற்சமயம் எனக்கு வேறு வழியில்லை” என்று அந்தக் கடிதம் முடிகிறது.

கடிதத்தின் முடிவில் என்றும் அன்புடன் என எழுதி அதன் கீழாக அங்கமுத்து கையொப்பமிட்டுள்ளார். அதன் கீழே 18.11.2017 என்று தேதி குறிப்பிடப் பட்டுள்ளது. கடிதம் எழுதிய நேரமாக முதலில் 10.45AM என்று எழுதிய அங்கமுத்து பிறகு, அதில் 10ஐ மட்டும் அடித்து  9.45. AM என்று மாற்றி எழுதியுள்ளார். முதலில் திட்டமிட்டதற்கு மாறாக தனது இறப்பினை ஒரு மணி நேரத்துக்கு முன்பாக துரிதப்படுத்தி உள்ளார் என இதன் மூலம் அறிய முடிகிறது.

அங்கமுத்து மரண வாக்குமூலமாக எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சியின் மாநிலத் தலைவரான பூமொழி நம்முடன் பேசினார். “தமிழகத்தில் ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றதாக விளங்கிய பெரியார் பல்கலைக் கழகம் தற்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு   ஆளாகி மதிப்பிழந்து நிற்க அதன் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் பிரதானக் காரணங்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

அங்கமுத்துவின் மரண வாக்குமூலம் சொல்லும் உண்மைகள் நம்மை அதிர வைப்பனவாக உள்ளன. ஒருவர் மரணவாக்குமூலம் தந்தால் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை விசாரித்து அதன் மீது சட்டப்படியான நடவடிக்கையைக் காவல்துறை எடுத்தாக வேண்டும். ஆனால், இன்றளவிலும் இறந்த அங்கமுத்துவின் மரணவாக்குமூலத்தை ஒரு பொருட்டாகவே காவல்துறை விசாரணைக்கு ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது. அதில் முக்கியமானவராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனிடம் இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவர் தி.மு.க. பின்னணி உள்ளவர் என்பதால் எதிர்க் கட்சியான தி.மு.க. இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்கிறது. அதே நேரத்தில் அவர் முதலமைச்சரின் சாதிக்காரர் என்பதால்  அரசுத் தரப்பிலும் நடவடிக்கை இல்லை என்பதாக மக்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றன…..

அங்கமுத்துவின் மரணவாக்குமூலம் குறித்துப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றினை அனுப்பி இருக்கிறோம். அதற்கும் நடவடிக்கை ஏதும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரவும் உள்ளோம்” என்றார் பூமொழி.

மனித உரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான தமயந்தியிடம் மரணவாக்குமூலத்தை சட்டம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று கேட்டோம். “ஒருவர் தரும் மரணவாக்குமூலத்தை அப்படியே எடுத்துக் கொண்டாக வேண்டும் என்கிறது சட்டம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது. தற்கொலை செய்தவர் தனது சாவுக்கு இன்னார்தான் காரணம் என்று மரண வாக்குமூலம் தந்திருந்தால் உடனே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவராக இருந்தால் நீதிமன்ற நடவடிக்கையுடன் துறைரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டாக வேண்டும். அவர் மீது கட்டாயம் எப்.ஐ.ஆர். போடப்பட்டாக வேண்டும். ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டு இருந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படா விட்டால்  அதில் ஏதோ முறைகேடு நடக்கிறது என்று பொருள்” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் தமயந்தி.

அங்கமுத்து மரண வாக்குமூலமாக எழுதியுள்ள கடிதத்தில் காணப்படும் தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டாலே பல்வேறு முறைகேடுகளின் முழுப் பின்னணி ஆதியோடு அந்தமாக அவிழ்க்கப்படும் என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் அதிமுக: கே.எஸ் அழகிரி சாடல்

30 லட்சம் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி …

One comment

  1. Hi, this is a comment.
    To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *